December 26, 2018
0

அதிகாலையில் ஆதவன் மேலெழும்பி பொன்னிற ஒளியை தெளித்துக் கொண்டிருந்தான். பறவையினங்கள் தங்களின் சிறகை விரித்து ஒவ்வொன்றாக பறக்க தொடங்கிக் கொண்டிருந்தன. எங்கிருந்தோ வந்த ஒரு பறவைக் கூட்டம் வானில் பல்வேறு சாகசங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தன. அவை ஒரு சேரப் பறந்து, ஒரு வடிவத்தைப் பெற்றும், திடீரெனப் பல குழுவாகப் பிரிந்து, பல்வேறு வடிவத்தைப் பெற்றும் அந்நாளுக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. இவை அனைத்தையும் மிக ஆச்சர்யத்துடன் பார்த்துக்கொண்டு திகைப்புற்று நின்றான் ஒரு சிறுவன். அவன் நெற்றியை திருநீற்றுப்பட்டை நிறைத்திருந்தன. அதிகாலையிலே எழுந்து, நீராடி, புத்தாடை உடுத்தியிருந்தான்.

பறவைகள் சாகசங்களை நிகழ்த்திக் கொண்டே நகர்ந்து அவன் பார்வையில் இருந்து மறைவதற்கும், சத்திரத்தில் இருந்து முப்பது அல்லது நாற்பது நபர்கள் அவன் நின்றிருந்த திண்ணைக்கு வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது. வந்தவர்களில் ஒரு சிலரைத் தவிர, அனைத்து ஆடவர்களும் பட்டு பீதாம்பரத்துடனும், பெண்களும், குழந்தைகளும் பட்டு சேலையும், பட்டு துணியும், விலையுர்ந்த அணிகலன்களும் அணிந்திருந்தனர். அனைவருக்கும் முன்னாள் வந்த பெண் ஒருவர், சிறுவனின் அருகில் வந்து, அவன் கன்னத்தை கிள்ளி இடப்புறமும், வலப்புறமும் ஆட்டினான். அனைவரும் பயணத்திற்கு தயாராகிவிட்டதை அறிந்த அச்சிறுவன், தன் தாய் அவனை இறக்கிவிடும் முன்னரே பொத்தென்று திண்ணையிலிருந்து குதித்தான். தரையில் ஊன்றிய இரு கைகளில் ஒட்டிய மண்ணை கைகளைத் தட்டி உதிர்த்தான்.

சத்திரத்தின் வெளியிலுள்ள மரத்தின் அடியில் அமர்ந்து, இந்நிகழ்வை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பெரியவர் ஒருவர் புன் முறுவல் பூத்தவாறே அங்கு வந்து சேர்ந்தார்.

"தாயே, தாங்கள் வரும் வரும் முன்பு, இந்த பிள்ளை வானில் பறந்து விளையாடித் திரிந்த பறவகைளைப் பார்த்து ரசித்து கொண்டிருந்தான். தற்பொழுது, அவை போலவே பறக்க ஆசை கொள்கிறான் போலும்" என்று கூறி அவன் முதுகில் செல்லமாக தட்டி விட்டு திரும்பிச் சென்றார்.

அந்த பெரியவர் மீண்டும் மரத்தின் அடியில் சென்று அமரும் வரை அவரைப் பார்த்துக் கொண்டிருந்த அவள், பின்னர் தன் மகனுடன் மற்றவர்கள் நின்றிருக்கும் இடத்திற்குச் சென்றாள். கூட்டத்தில் இருந்த ஆண்கள் பயணத்திற்கு தேவையான பணிகளைச் செய்து கொண்டிருந்தனர். ஒரு குதிரை வண்டியும், மூன்று மாட்டு வண்டிகளும் தயார் செய்யப்பட்டன. பயணத்திற்கு தேவையான உணவுப் பொருட்களும், உடமைகளும் ஏற்றப்பட்டு, சில பெண்களும், முதியவர்களும் வண்டியில் ஏறிக்கொண்டனர். ஒரு வண்டியில் அமர்ந்த அந்த சிறுவனும், அவனது தாயும், புறப்படும் முன்பு சத்திரத்தின் அருகில் இருந்த மரத்தை கண்டனர். சிறுவனைப் பாராட்டிய அந்த பெரியவரும், அவர் அருகில் அமர்ந்திருந்த இரு இளைஞர்களும் அங்கு இல்லை.

பயணம் தொடங்கிய சில நேரத்தில் அவர்கள் சென்று கொண்டிருந்த குறுகிய பாதை சிதம்பரம் செல்லும் பெருவழியை தொட்டது. கூட்டத்தில் இருந்த பெண்களும் முதியவர்களும், சிவ புராணங்களையும், தேவார பதிகங்களைப் பாடிக்கொண்டும், தங்கள் பிள்ளைகளுக்கு அவற்றைக் கற்றுக்கொடுத்துக் கொண்டும் வந்தனர். வண்டிகளுக்கு முன்னும் பின்னுமாக நடந்து வந்து கொண்டிருந்த ஆடவர்களில் சிலர் சிதம்பரம் கோவிலைப் பற்றியும், சிலர் நாட்டில் நடக்கும் நிகழ்வுகளையும் பேசிக் கொண்டும் வந்தனர்.

பெருவழியை அடைந்த சிறிது நேரத்தில், மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருந்த தன் அன்னையை அழைத்தான் அந்த சிறுவன்.

"அம்மா"

"ம்ம்ம்ம்" என்றவாறே திரும்பினாள் அவன் தாய்.

"அம்மா, நான் குதிரை வண்டியில் இருந்து இறங்கி, தந்தையுடன் நடந்து வருகிறேன்"

"மாறா! என்னவாயிற்று உனக்கு!! பெரியவர்கள் மட்டுமே நடந்து வருகின்றனர். உன் போன்ற சிறுவர்கள் வண்டியில் தானே வருகின்றனர்."

"இல்லை அம்மா! எனக்கு இந்த வண்டி பிடிக்கவில்லை. நான் தந்தையுடனே நடந்து வருகிறேன்"

"சரி இரு!" என்று குதிரை வண்டியை நிறுத்தச் சொல்லி அவனை இறக்கி விட்டாள்.

அவன் ஓடிச்சென்று தன் தந்தையின் கையை பிடித்து நடக்கலானான். குனிந்து அவனை ஒரு கணம் பார்த்த அவனது தந்தை, அவனது கையை இறுகப்பிடித்து, சட்டென்று திரும்பி தான் பாதியில் விட்ட பேச்சை நண்பருடன் தொடர்ந்தார். மாறன் சுற்றும் முற்றுமாக இயற்கையை ரசித்துக் கொண்டு வந்தான். சூரியனின் செங்கதிர்கள் அந்த செம்மண் பாதையில் பட்டு, மேலும் அவற்றை பொன் நிறமாக்கின. ஆங்காங்கே சிறு கடைகளை திறப்பதற்கு வியாபாரிகள் ஆயத்தம் ஆகி கொண்டிருந்தனர். அவர்கள் சென்று கொண்டிருந்த இடத்திலிருந்து, கூப்பிடு தூரத்தில், தன்னைப் பாராட்டிய பெரியவர் ஒரு சிறு மூங்கில் கொம்பை ஊன்றி, இரண்டு இளைஞர்களுடன் நடந்து கொண்டிருந்தார். அவர்களைப் பார்த்த அவனது கண்கள் திடீரென கூர்ந்து பார்க்க ஆரம்பித்தன. கண்ணனுக்கு எட்டும் தொலைவில், ஒரு சிறு புழுதிப் படலம் உருவாகி இருப்பது போல் அவனுக்கு தோன்றியது. அவை தங்களை நோக்கி நெருங்கி வருவதையும் அவன் கண்டான், அதுவும் மிக மிக வேகமாக!

தனது தந்தையை அழைத்துப் புழுதிப் படலத்தைச் சுட்டிக் காட்டினான். புழுதிக் கூட்டத்தைக் கண்டதும், நிலைமையை புரிந்து கொண்டவராய், தனக்கு பின்னால் வரும் வண்டிகளையும் கூட்டத்தையும் நிறுத்தினான்.

"எல்லோரும், தூரத்தில் தெரியும் புழுதி படலத்தைக் காண முடிகிறதா?" என்று வினவினார் மாறனின் தந்தை.

"ஆம்"..."ஆம்"..."ஆம்". கூட்டத்தில் இருந்து பல பேர் கூச்சலிட்டனர்.

"அது, ஒரு சிறு போர்ப் பரிப் படையாகவே இருக்கக்கூடும்" என்று மாறனின் தந்தை கூறினார்.

"யாருடையது?"... "ஐயகோ!"... "நாம் என்ன செய்வது!!"... மீண்டும் பலவாறு கூச்சல் தொடர்ந்தது.

"படை யாருடையது என தெரியவில்லை. சிறிது தூரத்தில், பெருவழியின் வலது புறத்தில், ஒரு பெரிய மூங்கில் விற்கும் கடை தெரிகின்றது. நாம் அதன் அருகில் சென்று ஒதுங்கி நிற்பதே சாலச் சிறந்தது" என்று கூறினார் மாறனின் தந்தை.

கூட்டத்தில் பலவாறு கூச்சல் அதிகமாகவே!

"நம்மிடம் அதிக நேரம் இல்லை. உடனடியாக அனைவரும் அந்த மூங்கில் கடையின் அருகில் உள்ள பகுதிக்கு செல்லுங்கள்!" என்று அவர் கூற, அனைவரும் மறுப்பு தெரிவிக்காமல் வேகமாக நடந்தும், குதிரை மற்றும், மாட்டு வண்டிகளைச் செலுத்தியும் அப்பகுதியை அடைந்தனர்.

அதே முடிவினை முன்னமே எடுத்ததினாலோ என்னவோ!, அந்த முதியவரும் அவருடன் வந்த இரு இளைஞர்களும் அந்த கடையின் அருகில் இருந்த மரத்தின் அடியில் அமர்ந்திருந்தனர். அனைவரின் கண்களும் அந்தப் புழுதி மண்டலத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தன. அந்த முதியவர் மட்டும் தன்னிடம் இருந்த மூங்கில் தடியினை முட்டுக் கொடுத்துத் தரையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர்கள் எதிர்பார்த்ததை விட வேகமாக நெருங்கி கொண்டிருந்தது அந்த புழுதி மண்டலம்.

தற்பொழுது, அனைவரும் வரும் படை யாருடையது என்று கணித்துவிட்டனர். பெரும் ஆபத்து தங்களை நோக்கி வருகிறதென்றும், அதை தடுக்கும் சக்தி தங்கள் எவரிடமும் இல்லை என்றும் உணர்ந்திருந்தனர். கூட்டத்தில் சலசலப்பு ஏற்படவே, மாறனின் தந்தையே பேசத் தொடங்கினான்.

"உங்கள் அனைவரையும் அமைதி அடையுமாறு கேட்டுக் கொள்கிறேன். வருவது யாரென்றும், அவர்கள் நோக்கம் இன்னது என்றும் அறியாமல், நாமே அவர்களிடம் மாட்டிக் கொள்ள வேண்டாம்." என்று மிக மெல்லிய குரலில் அவர்களுக்கு மட்டும் கேக்கும் படி கூறினான்.

"தம்பி! வருவது யாரென்று இன்னுமா தெரியவில்லை" என்றார் ஒரு பெரியவர்.

"தெரியாமல் என்ன!! வருவது ஒருத் துலுக்கப் படை, மற்றும் அவர்கள் நோக்கம் ஒன்றே..." என்று ஒரு இளைஞன் கூறி முடிக்கும் முன்பே,

"கொள்ளை..." என்று அவனது நண்பன் கூற, அவன் முழுதும் சொல்லி முடிக்கும் முன்னரே, மாறனின் தந்தை குறுக்கிட்டான்.

"நல்லது. தாங்களும் அறிந்தே வைத்துள்ளீர்கள். இருப்பினும், நாம் தற்போழுது ஏதும் செய்வதிற்கில்லை. அவர்களின் நோக்கம் வேறு இடத்திற்குச் செல்லுவதாக இருப்பின், நாம் அவர்களை வம்பிற்கு இழுப்பதில் ஆபத்து நமக்கே!" என்று கூறி மற்றவர்கள் கண்களை கூர்ந்து நோக்கிவிட்டு, மறுபடி தொடர்ந்தான்.

"மேலும், அவர்களிடம் இருந்து தப்பிப்பதாக எண்ணி ஓடவும், ஒளியவும் முனைய வேண்டாம் என்றே தோன்றுகிறது" என்று நிறுத்தினான்.

இவை அனைத்தும், ஆல மரத்தின் அடியில் அமர்ந்திருக்கும் மூவருக்கும் கேட்கவே செய்த்தது. அங்கிருந்த இரு இளைஞர்களும் பயணிகள் ஒதுங்கி இருந்த இடத்திற்கு நடந்து வந்தனர். அனால், அந்த முதியவர் சிறிதும் அசையாமல், தரையையே பார்த்துக் கொண்டிருந்தார். இரு இளைஞர்கள் தங்களை நோக்கி வருவதைக் கண்டு, அந்த கூட்டம் சிறிது மிரண்டாலும், அவர்களின் சாந்தமான முகத்தினைக் கண்டு சிறிது அமைதி அடைந்தனர்.

"ஐயா கூறுவது சரியே! இது நல்ல யோசனையாகவே தெரிகிறது. யாரும் பதட்டம் கொள்ளாமல் இங்கயே இருப்பதே நல்லது." என்று கூறினான் வந்தவர்களிள் ஒருவன்.

"அதே நேரத்தில், ஆடவர் அனைவரும் தாங்கள் ஆயுதம் என நினைக்கும் அனைத்தையும், தயாராகவும், மறைத்தும் வைத்துக் கொள்ளுங்கள். பெண்கள் அனைவரும் குழந்தைகளுடன் மறைவதற்குச் சரியான இடமும், சிறு, குறு வாள்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்." என்றான் மற்றொருவன்.

அதற்குள் அந்த சிறு படை, கூட்டம் நின்றிருக்கும் இடத்தின் முன்னேயுள்ளப் பெருவழிப் பாதையில், குதிரைகளின் வேகத்தைக் குறைத்து ஒவ்வொருவராக வந்து நின்றனர். நாற்பதில் இருந்து ஐம்பது பேர் இருந்த அந்தப் படையில் பாதி வீரர்கள் ஒவ்வொருவராகக் குதிரையில் இருந்து இறங்கினர். மீதமுள்ள வீரர்கள் குதிரையில் இருந்து இறங்காமல், அவர்களுக்குள் உருது மொழியில் பேசி சிரித்துக் கொண்டனர். இறங்கியவர்களில் பத்து பேர் கூட்டத்தைச் சுற்றி வளைத்து, அவர்கள் தப்பிச் செல்ல முடியாதபடி நின்றனர். சிலர் கூட்டத்திற்கு முன்பும், சிலர் பெருவழியிலும் நின்றனர்.

கன நேரத்தில் நிகழ்ந்து விட்டதைக் கண்டு கூட்டத்தில் இருந்தவர்கள் பயத்தில் விழித்தனர். அப்படையின் பயணமே நம்மை நோக்கியது தான் என்றும் உணர்ந்து கொண்டனர். அந்த சிறுபடையின் தலைவன் போல் இருந்தவன் குதிரையில் இருந்து இறங்கி கூட்டத்தினை உற்று நோக்கினான். அவன் கண்கள் அங்கிருந்த அனைவரையும் அளவெடுத்தன. அவன் குதிரையிலிருந்து இறங்கியதுமே, கூட்டத்தைச் சுற்றிக் காவல் இருந்த வீரர்களில் ஒருவன் மூங்கில் கடையினுள் புகுந்து, ஒரு நாற்காலியை எடுத்து வந்து ஆலமரத்தின் அருகில் போட்டான். அதில் அமர்ந்த அந்த தலைவன் பேச ஆரம்பித்தான்.

"நீங்கள் யார்?" என்று நல்ல தமிழில் பேசினான் அந்த அரபு நாட்டவன்

"நாங்கள் வழிப்போக்கர்கள் ஐயா! கால்நடையாக நடந்து கோவிலுக்குச் செல்கிறோம்" என்று அவன் அருகில் வந்து மண்டியிட்டு, பணிவுடன் கூறினான் முதியவருடன் வந்த இளைஞன் ஒருவன்.

பதிலுக்கு பேய் சிரிப்பு சிரித்தான் அந்த தலைவன்.

"தலைவர் சொன்னது சரியாகத்தான் போனது" என்று தனக்குத் தானேப் பேசி சிரித்தான் அந்தப் படையின் தலைவன்.

இளைஞன் ஒன்றும் புரியாமல் குழம்பவே, அந்த தலைவனே தொடர்ந்தான்.

"முழிக்கிறான் பார்" என்று உருது மொழியில் கூற, அந்த மொத்தப் படையுமே சிரித்தன.

"அறிவு இல்லாத மூடர்களே... நீங்கள் காலையில் தான் கோவிலுக்குச் செல்வீர்கள் என்றும், செல்லும் போது மூட்டை மூட்டையாகச் செல்வங்களைக் கொண்டு சென்று உங்கள் கோவில்களில் கொட்டுவீர்கள் என்றும் எங்கள் தலைவர் சொல்லி இருக்கிறார். எனவே, பகல் நேரத்தில் கொள்ளையிடவே எங்களுக்கு உத்தரவு." என்று கோரச் சிரிப்பு சிரித்தான்.

மேலும் தொடர்ந்தான், கொள்ளைக் கூட்டத்தின் தலைவன்.

"மேலும், இரவு நேரத்தில் கொள்ளைக்கு வந்தால், உன்னிடம் என்ன இருக்கப் போகிறது? நீ வாங்கி வரும் கட்டுச் சோற்றைக் கொள்ளையிடவா நாங்க வந்திருக்கிறோம்?..." என்று கூறி பேய் போல சிரித்தான்.

கடைசி வரிகளை அவன் உருது மொழியில் சொன்னதால், அதனை உணர்ந்த கொள்ளைக் கூட்டம் பெரும் சிரிப்பு சிரித்தது. சிரிப்பொலிகள் விண்ணை முட்டி அடங்கிய பின்னர், மிகவும் பணிவான குரலில் அந்த இளைஞன் பேச தொடங்கினான்.

"ஐயா, நாங்கள் சாதாரண வழிப்போக்கர்கள், எங்களிடம் ஒன்றும்...."

என்று ஏதோ சொல்லும் முன்பு,

"அதை, உன் கூட்டத்தில் இருக்கும் பெண்களின் கழுத்தை அலங்கரிக்கும் செல்வங்களிடம் கண்டேன்" என்று கூறி அவனை ஓங்கி மிதித்து எழுந்தான்.

எழுந்த வேகத்தில், அவன் அமர்ந்திருந்த மூங்கில் நாற்காலி பறந்து, ஆல மரத்தின் வேர் இடுக்கில் சோர்ந்து, குறுந்தடியை ஊன்றி, தரையை பார்த்துக் கொண்டிருக்கும் அந்த முதியவர் மேல் பட்டு விழுந்தது. அந்த நாற்காலி அந்த முதியவர் மேல் விழுவதற்கும், கொள்ளையர் தலைவன் மிதித்த வேகத்தில் அந்த இளைஞன் தரையில் இருமுறை உருட்டப்பட்டு, அவன் கண்கள் அந்தக் காட்சியை காண்பதற்கும் சரியாக இருந்தது.

மூன்றாம் முறை அவனே தரையில் உருண்டு, கால் இரண்டையும் மேலே உயர்த்தித் தலையைத் தரையில் ஊன்றிப் பின்னோக்கி எழுந்து, மீண்டும் கால்களை தரையில் ஊன்றி நிற்கும் முன்னரே, தன் இடுப்பில் இருந்த வளைதடியை தன் வலது கையில் உருவியிருந்தான்.

"வீரா..." என்று சத்தமிட்டு, வலது காலைத் தரையில் ஊன்றி, தனது உடலைச் சுழற்றி வளைதடியை மக்கள் கூட்டத்தின் வலப்புறம் வீசினான்.

வீரா என்ற ஒலி, மற்றோரு இளைஞனின் செவிகளைச் சென்றடைந்த அடுத்த வினாடி, வந்த ஒலி அலைகளைக் கிழித்துக் கொண்டு மற்றோரு வளைதடி மக்கள் கூட்டத்தின் இடது புறம் சென்றது.

இருபுறமும் சென்ற வளைதடிகள், மக்கள் கூட்டத்தினைப் பின்புறம் வளைத்து நின்றிருந்த நான்கு கொள்ளையர்களின் பின் கழுத்தைத் தழுவிச் சென்று, தனது முழு வட்டப் பாதையை எய்தவர்களின் கைகளில் முடித்தன. மக்கள் கூட்டத்தின் வலப்புறத்தில் இருந்த மூவரில், ஒருவன் உடைவாளை உருவும் முன்னரே, அவன் கழுத்தில் முஷ்டியைப் பதித்தான் வீரா. அவன் பொத்தென்று கீழே சரிய, அவன் பின்னே, ஒன்றன் பின் ஒன்றாக வந்த மற்ற இருவரில், முதல் வந்தவனின் வாளுடன் ஓங்கிய வலது கையைப் பிடித்து, அதை உருவி, குனிந்து அவனைத் தூக்கி தலைகீழாக எறிந்தான். அவன் பின் வந்தவனின் வாளை, தன் கையிலிருந்த வாளால் தடுத்து, வலது காலைத் தூக்கி, அவன் இடது காதின் அருகில் ஒரு உதை விட்டான்.

மறுமுனையில், மக்கள் கூட்டத்தின் இடதுபுறத்திலிருந்து பாய்ந்து வந்த மூன்று வீரர்களை, வெறும் கையினாலே வர்ம இடங்களில் தாக்கிச் சாய்த்தான், சண்டையைத் துவக்கிய அந்த இளைஞன். மறுகணம், மாறனின் தந்தையை அணுகி,

"இங்கு யாது நடப்பினும், எவரும் தப்ப முயல வேண்டாம், அவர்களது அம்பிற்கு இரையாக நேரிடும்" என எச்சரித்தான்.

தன் முன் மண்டியிட்ட இளைஞனை எட்டி உதைத்த வெறியிலும், பெருஞ்செல்வம் கிடைக்கப் போகின்றன என்ற களிப்பிலும், பராக்கிரமத்தை நிரூபித்ததாக எண்ணி, நாற்காலியை எறிந்து தன் கூட்டத்தின் பக்கம் திருப்பியவனுக்கு ஏமாற்றமே எஞ்சியிருந்தது. அங்கிருந்த அனைவரின் கண்களும், உண்மையில் நிகழ்ந்த பராக்ரமத்தைப் பார்த்துக் கொண்டிருந்தன. இவற்றை வியந்து, அவர்களின் ஆச்சர்யத்திற்கான விடையறிய திரும்பிய வேளையில்,

"பொத்"..."பொத்"..."பொத்"... என மக்கள் கூட்டத்தின் இருபுறமும் நின்றிருந்த தனது வீரர்கள், ஒவ்வொருவராக விழுவதைக் கண்டுவிட்டு மேலே நோக்கினான்.

தன்னிடம் உதை வாங்கிய இளைஞன் மக்கள் கூட்டத்தில் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தான். வலதுபுறத்தில், உறையில்லாத, உருவிய வாளுடன் ஒருவன் நின்றிப்பதைக் கண்டு, கடுங்கோபத்திற்குப் பதிலாக பெருங்குழப்பமே அடைந்தான்.

"இது எவ்வாறு சாத்தியப்படும். கண் இமைக்கும் நேரத்தில், ஒருவன் பத்து வீரர்களை சாய்க்க முடியுமா?" என்று முனுமுனுத்தான்.

மாறனின் தந்தையைக் கண நேரத்தில் எச்சரித்து விட்டு, மக்கள் கூட்டத்திலிருந்து சிறிது முன்னேறி வந்து நின்றான் சண்டையைத் துவக்கிய அந்த வீரன்.

"இவர்கள் இருவர் மட்டும் தானா? இல்லை இன்னும் பலரா? இது வழிப்போக்கர் கூட்டமா? இல்லை ஒரு சிறு படையா?" என்று பல கேள்விகளைத் தனக்குள்ளே கேட்டுக்கொள்ளும் பொழுது, சிறிதாக நடுங்கவே செய்தான்.

சட்டென உணர்வு வந்தவனாய், தன் வீரர்களை முடுக்கி விட்டான். அனைத்து கொள்ளையரும் பெருவழியிலிருந்து ஒதுங்கி நின்றிருந்த மக்கள் கூட்டத்தை நோக்கிப் பாய்ந்தனர்.

"குமரா..." என்று கூறி தன் தலையை அசைத்தான் வீரா.

மக்கள் கூட்டத்தை நெருங்க விடாமல், குமரனும், வீராவும் முன் வந்து அவர்களைச் சந்தித்தனர். குமரன் வெறும் கைகளினாலே போரிட்டான். வர்ம இடங்களைத் தட்டியே கொள்ளையர்களை செயலிழக்கச் செய்து கொண்டிருந்தான். வீரா, வாள் கொண்டுப் போரிட்டாலும், கொலைவெறித் தாக்குதலைத் தவிர்த்து, வெட்டு வர்மத்தின் மூலம் வர்ம நரம்புகளைக் கிழித்தது எதிரிகளை செயலிழக்கச் செய்தான். இருப்பினும், அந்த இரு வீரர்களும், கொள்ளையர்கள் மக்கள் கூட்டத்தை நெருங்க விடாமல் பெருவழிக்கு அவர்களை ஒதுக்கினர். சிறிது நேரமே நீட்டித்த அந்தப் போர் முடிவுக்கு வந்தது. சிறு காயங்களுடன், வீராவும், குமரனும் உயிருடன் பிடிக்கப் பட்டனர். அவர்களின் கைகள் இரண்டும் பின்னேக் கட்டப்பட்டது.

கூட்டத்திலிருந்த அனைவருக்கும் துக்கம் தொண்டையைக் கவ்வியது. தங்களுக்கு உதவி செய்ய எண்ணி, தற்பொழுது, அவர்களின் உயிர் கேள்விக்குறியாகி விட்டதே என அனைவரும் வருந்தினர். இங்கு நடப்பவை எதையும் உணர முடியாத, வயோதிகத்தின் தளர்ச்சியில், அவரது தந்தை அங்கு மரத்தின் அடியில் அமர்ந்துள்ளாரே! அவரின் வாழ்வு இனி பிள்ளைகள் இல்லா நரகமாக மாறுமே என்ற குற்ற உணர்வில் தவித்தனர். சிலர், தங்கள் உயிரும், வாழ்வும் தங்களை விட்டுப் பிரிவதை எவராலும் தடுக்க இயலாது என்ற பயத்தில் இருந்தனர்.

அதே வேளையில், இந்த இருவர் சேர்ந்து, தன் படையில் இருந்த பதினேழு வீரர்களை வீழ்த்தி விட்டார்கள் என்ற கடும் கோபத்தில் இருந்தான், கொள்ளையர் தலைவன். அனால், ஏன் எவரையுமே கொல்லவில்லை என்ற குழப்பமும் அவன் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தது. அவ்விருவரையும் கொள்ளையர் தலைவன் முன்பு மண்டியிட வைத்தனர்.

"ம்ம்ம்ம். இருவரால் ஒரு படையை வெல்ல முடியாது என்பது முட்டாள்களுக்கும் தெரியும்" என்று கூறி, இருவரையும் ஏளனமாக பார்த்தான் கொள்ளையர் தலைவன்.

இருவரிடமும் பதில் வரவில்லை...

"களரியும், வளரி எறியவும் தெரிந்தால், பெரு வீரன் என்ற நினைப்பா?"

பதில் வரவில்லை...

"மாலிக் காஃபூரின் உப தளபதி நான் கேட்கிறேன். உங்கள் இருவருக்கும் எவ்வளவு அழுத்தம்" என்றான் கொள்ளையர் தலைவன்.

பதில் இல்லை.

ஆனால், வீரர்கள் இருவரும் சட்டென ஆல மரத்தின் அடியில் நோக்கினர். இவ்வளவு நாழியும் தரையைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த இரு விழிகள், கூர்ந்து கொள்ளையர் தலைவனைப் பார்த்துக் கொண்டிருந்தன. அதை கொள்ளையர் தலைவன் பார்த்திருப்பானாயின், பயத்தினாலே அவன் உயிர் பிரிந்திருக்குக்கும்.

"இவர்களின் தலைகள் கொய்யப்படட்டும்" என்று சீறினான் கொள்ளையர் தலைவன்.

உடனே, வேலைகள் உற்சாகத்துடன் நடந்தன. எதிரிகளின் தலையரியும் முன்பு செய்ய வேண்டிய வழிபாடுகளைச் செய்தனர். குமாரனையும், வீராவையும் அந்த பெருவழியின் நடுவே, மண்டியிடச் செய்திருந்தனர். அனைத்து கொள்ளையர்களும், அவ்விருவரைச் சுற்றி நின்று கொண்டு ஆரவாரம் செய்து களித்தனர். அவர்கள் இருவரும், கொள்ளையர்களால் சூழப்பட்டதால், உள்ளே நடப்பதை அங்கிருந்த மக்கள் அறிய முடியவில்லை. இரு வாள்கள் மேலே உயர்ந்தது மட்டும் அவர்களுக்குப் புலப்பட்டது.

"இதோ! முடிந்து விட்டது!!" என்று கதறினார் கூட்டத்தில் ஒரு பெரியவர்.

உயர்ந்த வாள்கள் கீழே விழுந்து உரசி ஒலி எழுப்பின. வாள்களை ஓங்கிய இரு வீரர்களும் "பொத்"... "பொத்" என மண்ணில் விழுந்து புரண்டனர். என்ன நடந்தது என்பது, மக்கள் கூட்டத்திற்கு மட்டுமல்லாமல், கூடியிருந்த கொள்ளையர்களுக்கும் புரிவதற்கு சில வினாடிகள் ஆகின.

ஓங்கிய இரு வாள்களின் மீதும், எங்கிருந்தோ வந்த மூங்கில் கம்பொன்று வேகமாக தடுத்ததில், ஓங்கிய இரு வீரர்களும் விழுந்தனர், மூங்கில் கம்பு தரையில் விழுந்ததும் அதில் வெட்டப் பட்டிருந்த வாள்களும் தரையில் விழுந்து அந்த ஒலியை எழுப்பி இருந்தன. இவை உணர்ந்த கொள்ளையர்கள், மூங்கில் வந்த திசையை நோக்கி பார்த்து வியந்தனர். அங்கு அமர்ந்திருந்த ஒரு முதியவர் எழுந்து நின்று கொண்டிருந்தார். அவர் கண்கள் தீப்பிழம்பாய் கக்கின.

தனது காலுக்குக் கீழே இருந்த நாற்காலியை ஒரு உதை உதைத்தார் அந்த பெரியவர். அது நேராக மூங்கில் அடுக்கி வைத்திருந்த குவியலில் விழுந்தது. மூங்கில் தடிகள் சரியத் தொடங்கியதும், தன் பக்கம் சரிந்த ஒரு மூங்கில் தடியை பிடித்து சுழற்றியவாறே கொள்ளையர் கூட்டத்தில் நுழைந்தார். கூட்டத்தில் பலர் அந்த சுழற்சியில் சிக்கி மண்ணைக் கவ்வினர். எனவே எளிதாக கொள்ளையர் தலைவனை அடைந்தார்.

கொள்ளையர் தலைவனும், நிலையறிந்து தன் வாளை உருவி வீசினான். அவனது வேகத்தை, தனது இடது கையிலிருந்த மூங்கில் கொண்டு அவன் மணிக்கட்டுப் பகுதியிலேயே நிறுத்தி, வலப்புறம் சுழன்று, வலது கை மூட்டினை அவன் தாடைப் பகுதியில் ஒரு இடி இடித்ததில், அவனது தாடை உடைந்தது. நிலை குலைந்து, கீழே விழ இருந்தவனின் இரு கைகளையும் பிடித்து முன்னுக்கு இழுத்து, அவனது தாடையை அசைத்துப் பார்த்தார். இரண்டு, மூன்று முறை அசைத்துப் பார்த்த்தார். அது உடைந்து கழுத்து வரை தொங்கிக் கொண்டிருந்தது.

குற்றுயிரும், குலையுருமாக, நிற்கவும் இயலாமல் தள்ளாடியவனின், இரு கைகளையும் பிடித்து வெளிப்புறமாக வீசினார். அந்த வேகத்தில், அவன் பின்னோக்கிச் சரிய, தனது வலது காலை உயர்த்தி உடைந்த தடைப் பகுதிக்கும், கழுத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் ஓங்கி ஒரு உதை விட்டார். காற்றிலே, இரு கைகளும் விரித்தவரே பறந்தான். அவனது தலை, தன் உடலை விட்டுப் பிரிவது போன்று சில வினாடி உண்டர்ந்தான். அவன் தரையை அடையும் முன் அவன் உயிர் உடலை விட்டுப் பிரிந்து இருந்தது. உருவிய அவனது வாள் அவன் கை விட்டுப் பிரிந்து, சிரிது உயரப் பறந்து, பின்னர் தரையில் குத்தி நின்றது.

அசாதரண உயரமும், முரட்டுத் தேகமும், கர்ஜிக்கும் குறளுடனும் வலம் வந்த, ஈவு இறக்கமின்றி கொலைத் தொழில் செய்து வந்த தங்கள் தலைவனின் உயிர், தம் கண் முன்னரே சில வினாடிகளில் பிரிந்ததை அவர்களால், நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் இயலவில்லை. வாளுருவி நிற்கும் ஒரு படையை, அதுவும் கொலைக்கும், கொள்ளைக்கும், ஈவு இறக்கமற்ற முறையில் தாக்கும் துலுக்கப் படையை, ஒரே ஒரு மூங்கில் தடி கொண்டு பிளந்து அதன் தலைவனைத் தாக்கி கண்ணிமைக்கும் நேரத்தில் விண்ணுலகம் அனுப்பிய இந்த கிழவன் உண்மையில் மனிதனா என்றெண்ணினர். அந்த கிழவன் முகத்தில், தங்கள் தலைவனைக் கொன்ற களிப்பும் இல்லை, அவனைச் சுற்றி ஒரு படையே உள்ளதென்ற வியக்கவும் இல்லை. ஆனால், முன்பிருந்த கூன் தற்போது அவரிடம் இல்லை என்பதைக் கொள்ளைக் கூட்டத்தில் ஒருவரும் அறியவில்லை!.

தங்கள் வளையத்தில் சிக்கிய இவர்களை எப்படியாகினும் கொன்று விட வேண்டும் என்ற ஒரு எண்ணம் மட்டுமே அவர்களில் மேலோங்கி இருந்தது. அம்மூவரும் அவர்களைச் சட்டை செய்யததாகத் தெரியவில்லை, தங்களுக்குள் ஏதோ கண்ணசைவில் பேசினர். இறுதியில் அந்த கிழவன் தனது வலது கையின் இரு விரலைக் காட்டி, இருமுறை மடக்கி நீட்டியதன் விளைவாக வீராவும், குமரனும் பேரானந்தம் கொண்டனர்.

கொள்ளையர் கூட்டம் கொலைவெறித் தாக்குதலைத் தொடங்கினர். கூன் இல்லாக் கிழவனின் மூங்கில் சுழல ஆரம்பித்தது. வீராவும், குமரனும் பின்னோக்கிக் கட்டப்பட்டிருந்த தங்களது கைகளை இனைத்து ஓர் இடத்தில் நின்று, ஒருவரையெருவர் காத்து, கொள்ளையர்களை எதிர்த்துப் போரிட்டனர். தங்களது கால்களினால் வர்மங்களில் கொடூரத் தாக்குதல் நடத்தி சிலரை வீழ்த்தினாலும், கைகள் கட்டப்பட்டதின் விளைவாக பல காயங்களை உடலில் பெற்றனர்.

மறுபுறம் மூங்கிலின் சுழற்சியில் சிக்கி நிலத்தில் உருண்ட கொள்ளையர்கள், இம்முறை திரும்பி எழவில்லை. கண நேரத்தில் தன்னையும், வீரா மற்றும் குமரனைப் பிரித்திருந்த கோடு போன்ற படை முற்றிலும் தகர்க்ப்பட்டது. சுழற்சியை நிறுத்தி மூங்கில் தடியை இடக்கையில் பிடித்து, வாளுருவித் தன் மீது பாய்ந்து வந்த ஒருவனை மட்டும் தன்னை நெருங்க அனுமதித்து, ஓங்கிய அவனது கையின் சுழற்சியை தன் வலக்கையால் வழிநடத்தி, குமரனின் கையில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் முடிக்கவிட்டான் அந்த கிழவன். தன் கையால் எதிரியின் கைக்கட்டு களைந்து விட்டதே என்று மனம் வருந்தவும் இடம் கொடாமல், தனது மார்பில் பதிந்த அந்த கிழவனின் பாதம் தந்த வலியினால், இவன் மனிதனே அல்ல என்றெண்ணிக் கொண்டே தன்னுடலை நிலத்தில் விட்டு வானுலகம் சென்றான்.

அதே வேளையில், கைக் கட்டு களைந்ததும், இறையைக் கண்ட வன்புலி போலக் கொள்ளையர்கள் மீது பாய்ந்தான் குமரன். சிறிது வினாடியில் வீராவின் கைக்கட்டும் விடுபட செய்வதறியாது திணரினர் கொள்ளைக் கூட்டத்தினர். இம்முறைத் தாக்குதல் வேறு மாதிரியாக இருந்தது. பலர் இரண்டகமாக்கப் பட்டு குருதி ஆறு ஓடி செம்மண் தரையை மேலும் செம்மையாக்கியது. இருவரின் கைக்கட்டு அவிழ்க்கப்படும் முன்னரே, பாதிப்படையானது மூங்கில் தடி ஆயுதத்திற்கு இறையாதால், போர் அதிக நேரம் நீடிக்காமல், முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இதுவரை நடப்பவை என்னவென்று அறியாதவாறு போரினால் ஏற்பட்ட புழுதி சூழ்ந்திருந்தது. அங்கு நின்றிருந்த மக்கள் குழப்பத்தில் இருந்தனர். கொள்ளையர்களின் குருதி பூமியை நனைக்க, அவைப் புழுதியில் படிய, அனைத்தும் மக்களுக்கு விளங்கின. செம்மண் புழுதி படிந்த ஒரு நெடிய உருவம், சுற்றியிருக்கும் பினங்களுக்கு நடுவே, குமரனுடம், வீராவுடனும் ஏதோ பேசிக் கொண்டிருந்தது. அவர்கள் மூவரின் முன்னே, இரு கொள்ளையர்கள் குற்றுயிரும் குலையுயிருமாக மண்டியிட்டு தள்ளாடிக் கெண்டிருந்தனர்.

ஆச்சர்யத்தின் விளிம்பில் நின்றிருந்தனர் மக்கள்.

"யார் இவர்!?... இவர் எங்கிருந்து வந்தார்!?" என்று தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்த வேளையில் அவர் மக்களை நோக்கி நடக்கலானார். குமரனும், வீராவும் அவன் பின்னால் நடந்து வந்தனர். வரும் வழியில் சட்டென நின்ற அவர், எங்கோ விழுந்திருந்த தனது ஒட்டு தாடியை எடுத்து கையில் வைத்துக் கொண்டு மக்கள் அருகே வந்தார். அப்பொழுது தான் மக்கள் அங்கே இருந்த மரத்தின் அடியைக் கண்டனர்.

"ஓ! ஹோ!! அவரா இவர்!..."

"கம்பீர நடையில் நெடிதுயர்ந்து வரும் இவரா கிழவராக வேஷமிட்டவர்!"

"கொள்ளையரைப் பந்தாடிய இக்கால்களா சற்று முன்பு தளர்ந்து, தள்ளாடியவை!"

என்று பலவாறு பேசிக் கொண்டனர்.

"அபாயம் விலகியது! நீங்கள் அனைவரும் நிம்மதி அடையலாம்" என்று மக்களை நோக்கிக் கூறி புன்முறுவல் செய்தார் அவர்.

போரின் விளைவால் தலை களைந்து, உடல் முழுவதும் புழுதி படிந்திருந்த போதிலும், அந்த களையான முகமும், அதில் தவழும் புன்சிரிப்பும் கண்டு அந்த கூட்டம் ஓரளவு சாந்தி அடையத்தான் செய்தது. தங்களைக் காத்தவன் தம் மகன் பிராயத்தினன் என்றெண்ணி வயதான ஆண்களும் பெண்களும், அவன் கையைப் பிடித்தும், கண்ணத்தைப் பிடித்தும் நன்றியையும், ஆசியையும் வழங்கினர். அங்கிருந்த இளைஞர்கள் தங்களுடைய உள்ளத்தில் இருந்த வீரமென்னும் விளை நிலத்தில் விதையாக அவனை விதைத்தனர்.

"நீ வரவில்லை எனில் இந்நேரம் எங்களின் நிலை என்னவாகி இருக்கும் என்றெண்ணும் போது உடல் பதை பதைக்கிறதப்பா!" என்றார் ஒரு வயதான மூதாட்டி.

"தாயே! அங்கு பாருங்கள்!! உடம்பில் ஏற்பட்ட ரணத்தில், குருதி ஆறு ஓடி, அவர்களின் மூச்சுக் காற்றின் உஷ்ணத்தில் அவை உறைந்திருப்பதைப் பாருங்கள். இயல்பில், வலியில் துடிக்க வேண்டிய அவர்களின் எண்ணங்கள், உங்களனைவரையும் காத்ததற்காக புளங்காகிதம் அடைந்து கொண்டிருக்கிறது. இத்தகைய வீரர்கள் இந்நாட்டின் சொத்துக்கள்!" என்று பெருமிதத்துடன் கூறினார்.

ஒரு காதலன் எவ்வாறு காதலியின் பேச்சில் மயங்கி நின்ற இடத்திலிருந்தே வேற்றுலகம் சஞ்சரிப்பானோ, அதுபோல, கிடைத்தற்கரிய இடத்தில் இருந்து பாராட்டைப் பெற்றதால், வீரா தன்னை மறந்து வானுலகில் மிதந்தான். அவனது முகம் பல்வேறு விதமான களிப்பு உணர்ச்சிகளை வெளியிட்டது. எளிதில் உணர்ச்சி வசப்படாத குமரன் அவனைப் பார்த்து சிரித்தான். இதைக்கண்ட வீரா, சட்டென இவ்வுலகம் திரும்பி மறுபடியும் தனது முகத்தை கடுமையாக்கி கொண்டான்.

"ஆம் அப்பா! நீ சொல்வது சரியே, இவ்விரு பெரும் வீரர்களால் தான் நாங்கள் பிழைத்தோம்" என்று கூறினார் மற்றொரு மூதாட்டி.

"உண்மையில் நம்மை காத்தது கொள்ளையர் தலைவனே!" என்று சிரித்துக்கொண்டே கூறினான் குமரன்.

"என்ன! அது எப்படி! என்று ஆச்சரியத்தில் எழுந்தன பலரின் குரல்கள்.

"அவன், தனது தலைவனின் பெயரைக் கூறாதிருந்தால் இந்நேரத்திற்கு நாம் அனைவரும் எமலோகத்தின் வாயிலில் நின்றிருப்போம். எனவே நம்மை காத்தது அவனே!" என்று கூறி பலமாகச் சிரித்தான் வீரா.

இதன் அர்த்தம் புரியாது மக்கள் விழிக்க, இந்த சம்பாஷணையை கைவிட மீண்டும் அந்த இளைஞனே தொடர்ந்தான்.

"நீங்கள் அனைவரும் தங்கள் ஊர் திரும்புவதே சிறந்தது என்று எண்ணுகிறேன். சிதம்பரம் துலுக்கர்கள் கையில் அகப்பட்டு இருக்கலாம். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். இந்நாடு வீரத் திருமகன்களின் பிறப்பிடம், உறைவிடம்! ஒரு நாள், அவர்கள் அகற்றப்பட்டு நீங்கள் திரும்பவும் சிதம்பரம் பயணப்படலாம், எந்த ஒரு பயமும் இன்றி"

"சத்திய வார்த்தைகள், ஆனால் இதற்கு விதிவிலக்கு உண்டு தம்பீ! அரச மகுடம் பூண்டு, செங்கோல் ஏந்திய வீரபாண்டியன், இந்நேரத்திற்கு எந்த மாளிகையில், தேனில் பலாச்சுளை கலந்து உண்டு, உறைந்து கொண்டிருக்கிறானோ?!" என்றார் ஒரு முதியவர்.

இதைக் கேட்ட வீரா பொருமினான், குமரன் கவலையுற்றான். ஆனால் அந்த மற்றொரு இளைஞன் முகத்தில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஆனால், அடுத்து செய்ய வேண்டியதை முடிவெடுத்துவிட்டார் என்று குமரனும், வீராவும் உணர்ந்தனர்.

" உண்மைதான் ஐயா!" என்று கூறி எழுந்தான் அவன்.

"வீரா, கண்கள் நோண்டப்பட்ட கொள்ளையனை இடப்புறமுள்ள மரத்தில் கட்டிவிடு. நாக்கு அறுக்கப்பட்ட இன்னொருவனை எதிர்பபுறமுள்ள மரத்தில் கட்டிவிடு. செய்தி அறிந்து வேறுபடை இங்கு வரும், நடந்ததை அறிய இவ்விருவரையும் விசாரணை செய்யும். பார்வையில்லாத, பேச இயலாத இவ்விருவரின் தகவல்கள் படையினைக் குழப்பும், அடுத்து செய்ய வேண்டியவற்றை தாமதப்படுத்தும்."

ஆச்சரியத்தில் உறைந்தனர் மக்கள். தங்கள் உயிரைக் காப்பதில் எவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்கிறான் இவன் என்றெண்ணினர். ஆனால், வீராவும், குமரனும் ஆச்சரியம் கொள்ளவில்லை. மாறாக, அவரது அடுத்த உத்தரவிற்காக காத்திருந்தனர். அது, அவ்விருவரின் தலையில் இடியாக இறங்கியது.

"குமரா! வீரா! நீங்கள் இருவரும் இந்த கூட்டத்திற்கு துணையாக அவர்களுடன் செல்லங்கள். நான் சிதம்பரம் நோக்கிப் பயணப்படுகிறேன். அடுத்த சதுர்தசி ஜாமத்தில் உங்களை அங்கு சந்திக்கிறேன்"

"தங்களை விட்டு விட்டு..." என்று ஏதோ கூற வந்த குமரனை தடுத்து,

"இதற்கு மேல் நமக்கு அவகாசம் இல்லை, குமரா. புறப்படுங்கள்!" என்று கூறியவரே தனது ஒட்டு தாடியையும்,மீசையையும் முகத்தில் பொருத்தி, தனது தடியை கையில் எடுத்தார்.

இம்முறை பதில் திட்டமாக வந்ததால் மறுப்பு ஏதும் கூறாமல், அவ்விருரும் புறப்பட தயாராகியிருந்த கூட்டத்துடன் சேர்ந்து கொண்டனர். சிதம்பரத்திற்கு எதிர் திசையில் ராஜபாட்டையில் அவர்கள் நடந்தனர். அதற்கு நேர் எதிரில், கிழவனாகிய அந்த இளைஞன் தடியை ஊன்றி நடந்தான்.

"இந்த நன்றி கெட்ட கூட்டத்திற்கு பாதுகாப்பு ஒரு கேடா, பலாக்கனி உண்டு, உறங்க அவர் என்ன உன் வீட்டுப் புது மாப்பிள்ளையா? மூஞ்சியும் முகரக்கட்டையும் பார்...டேய் தடிக் கிழவா... ம்ம்ம்ம் இரு இரு உன்னை" என்று மனதிற்குள் குமுறினான் வீரா.

மனித மூளை வெளியிடும் மின்காந்த அலைகளை கிரகித்து அவர் எண்ணங்களை அறியும் திறன் கொண்ட அந்த கிழவனாகிய இளைஞன், திரும்பி, வெகு தூரம் சென்றுவிட்ட மக்கள் கூட்டத்தை நோக்கினார். ஏனோ வீராவும் திரும்பினான்.

"சரித்திரத்தில் நான் யார் என்பது அவசியமற்றது வீரா. நிகழ்கால கடமையாற்றுவது ஒன்றே முதன்மையானது. தீய எண்ணம் கொண்டு உள் நுழைந்திருக்கும் துலுக்கர் அரணை உடைத்தெறிவதே எனது உயிரினும் மேலான பணி. மேலும், நான் யார் என்பதை மக்களுக்கு தெரிவிப்பதில் நேரத்தை செலவிடாதே. நீ செய்ய வேண்டிய பணி நிரம்ப உள்ளது வீரா."

செவிகளால் உணர முடியாத இவ்வரிகள், வீராவின் மூளையில் ஊடுருவி அவன் உள்ளத்தை நேரிடையாக அடைந்தன. கண்ணீர் துளிந்த்து அவன் கண்களில். அதனைத் துடைத்துவிட்டு, திரும்பிச்சென்று கூட்டத்தோடு நடக்க ஆரம்பித்தான். அந்த கிழவரும் திரும்பி தடியை ஊன்றி நடக்கலானார்.

ஒளி அலையாக நடந்த அந்த சம்பாஷணையை சிறுவன் மாறனும் உணர முடிந்ததாலோ என்னவோ, அவன் சட்டென திரும்பி நின்று, எதிர் திசையில் நடந்து சென்று கொண்டிருந்த கிழவரையே உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.

"வீரபாண்டியர்... வீரபாண்டியர்... வீரபாண்டியர்..." என்று அவன் உள்ளம் அழைத்தது.

கிழவராகிய அந்த இளைஞன் நடந்துகொண்டே புன்னகைத்தார்!




0 comments:

Post a Comment