வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழு நோன்தாள்
அணங்கு அருங் கடுந்திறல் என் ஐ முணங்கு நிமிர்ந்து,
அளைச் செறி உழுவை இரைக்கு வந்தன்ன
மலைப்பரும் அகலம் மதியார் சிலைத்து எழுந்து
விழுமியம், பெரியம், யாமே நம்மிற்
பொருநனும் இளையன், கொண்டியும் பெரிது என,
எள்ளி வந்த வம்ப மள்ளர்,
புல்லென் கண்ணர் புறத்தில் பெயர,
ஈண்டு அவர் அடுதலும் ஒல்லான்; ஆண்டு அவர்
மாண் இழை மகளிர் நாணினர் கழியந்
தந்தை தம்மூர் ஆங்கண்,
தெண் கிணைக் கறங்கச் சென்று, ஆண்டு அட்டனனே!
- இடைக்குன்றூர் கிழார் ( 78 / புறம்400 )
விளக்கம்:
நன்கு மார்பில் படிந்த மாலை அணிந்து, வலிமையுடைய ஆற்றலால் எதிரிகளுக்கு அச்சத்தை உண்டாக்குபவன் என் மன்னவன் பாண்டிய நெடுஞ்செழியன். அவன், சோம்பல் முறித்து குகையிலிருந்து இரை தேட செல்லும் புலி போன்றவன். அவன் பெருமை அறியாமல் ஆரவாரம் செய்து, தாமே சிறப்புடையவர்கள், பெருமையுடையவர்கள், தம்மைக் காட்டிலும் வயதில் சிறியவன் பாண்டியன் மற்றும் நமது படையும் பெரிது என்றெண்ணி எதிரிகள் போருக்கு வந்தனர். அவர்களை போர் களத்தில் அழிக்காமல், புறமுதுகிட்டு ஓடச் செய்து, அணிகலன்கள் அணிந்த அவர் மகளிர்கள் நாணுமாறு, போர் முரசு ஒலிக்க, அவர்கள் இருப்பிடம் வரைத் துரத்திச் சென்று அழித்தான்.
0 comments:
Post a Comment