December 29, 2018
0
கிண்கிணி களைந்தகால் ஒண்கழல் தொட்டுக்

குடுமி களைந்த நுதல்வேம்பின் ஒண்தளிர்

நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து,

குறுந்தொடி கழித்த கைச்சாபம் பற்றி,

நெடுந்தேர் கொடிஞ்சி பொலிய நின்றோன்

யார் கொல்! வாழ்க அவன் கண்ணி! தார் பூண்டு

தாலி களைந் தன்றும் இலனே! பால் விட்டு

அயினியும் இன்று அயின்றனனே! வயின்வயின்

உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை

வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே! அவரை

அழுங்கப் பற்றி அகல்விசும்பு ஆர்ப்பு எழக்

கவிழ்ந்து நிலம் சேர அட்டதை,

மகிழ்ந்தன்றும் இகழ்ந்தன்றும் அதனினும் இலனே!

- இடைக்குன்றூர் கிழார் (77/புறம்400)


விளக்கம்:

சிறுவர்கள் காலில் அணியும் கிண்கிணி சலங்கையை களைந்து வீரக்கழல் அணிந்து,  சிறுவர்கள் போடும் முடிக் குடுமி களைந்து பசுமையான வேப்பந்தளிரை தலையில் சூடி, கையில் ஏந்தி, மிகப் பெரிய தேரில் பொலிவாக நிற்கும் இவன் யார்?!

அவன் வாழ்க! அவன் புகழ் வாழ்க!
பகைவரை அழிக்கும் நோக்குடன் மாலை சூடி, இளம் பருவத்தினர் அணியும் ஐம்படைத் தாலியை இன்னும் களையாதவனே. பால் அருந்துவதை விட்டு, இன்று தான் சோறு(உணவு) உண்டவனே. போர் செய்ய வந்த வீரர்களைக் கண்டு, நீ வியப்படையவும் இல்லை, அவர்களை இழிவாக எண்ணவும் இல்லை. ஆராவாரம் செய்து வந்த அவர்கள் வானுலகம் செல்ல, நிலத்தில் புதையுமாறு அழித்ததை எண்ணி, நீ மகிழவும் இல்லை, தோற்றதனால் அவர்களை இகழவும் இல்லை.

0 comments:

Post a Comment