வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்,
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன
உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற!
நின்னொன்று கூறுவது உடையேன்; என் எனின்,
நீயே, பிறர்நாடு கொள்ளும் காலை, அவர் நாட்டு
இறங்கு கதிர்க் கழனிநின் இளையோரும் கவர்க!
நனந்தலைப் பேரூர் எரியும் நைக்க!
மின்னு நிமிர்ந் தன்னநின் ஒளிறு இலங்கு நெடுவேல்
ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம்
கடிமரம் தடுதல் ஓம்பு; நின்
நெடுநல் யானைக்குக் கந்துஆற் றாவே!!
- காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் ( 57 / புறம்400 )
விளக்கம்:
எளியவராயினும், வல்லமை உடையவராயினும், உன்னை புகழ்பவற்கு திருமாலைப் போன்று துணை நின்று காக்கும் பாண்டிய நன்மாறா!. நீ, பிறர் நாட்டிற்கு படை நடத்திச் செல்லும் போது, நெல் வயல்களைக் கவர்ந்து கொள், நலம் விளங்கும் பெரிய ஊர்களை தீக்கிரையாக்கிக் கொள், மிளிறும் உன் கூரிய வேல்களைக் கொண்டு பகைவர்களை அழித்துக் கொன்றாலும் கொல்லுக!. ஆனால் அந்நாட்டின் சாலையிலுள்ள காவல் மரங்களை மட்டும் அழிக்காதே! உன் நெடிய யானைகளுக்கும் அவைகள் தாங்காது...என்று பாண்டிய நன்மாறனைப் புகழ்ந்து பாடுகிறார், பூம்புகாரின் கார் கண்ணனார்.
0 comments:
Post a Comment